Saturday, May 17, 2014

மனிதம்

ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் தான் நரகம்!! எங்கோ படித்தது..எவ்வளவு உண்மை இது! 

ஒரு பேருந்தில் ஏறினால்,தனியாக யாரும் இல்லாத சீட்டில் தானே தேடி அமர்கிறோம்?தப்பி தவறி யாரேனும் வந்து உட்கார்ந்தால், ஹய்யோ எப்போ இறங்குவனோ என்று தானே தோன்றுகிறது? மூன்று நான்கு மணி நேரம் தனியாக கூட இருக்க முடியும்..அனால் சக மனிதனை சகித்து கொள்ள இயல வில்லை.. ஏன்?

எங்க போனாலும் கூட்டம்,நெரிசல் என்ற வேதனை நெஞ்சை விட்டு அகல்வதில்லை..நாமும் அந்த கூடத்தில் ஒருவர் தான் என்ற உண்மையை மறந்து விட்டோம்..

இந்த உலகில் அனைவர்க்கும் கவலைகள் உண்டு,பிரச்சனைகள் உண்டு,தேவைகள் உண்டு..சிலருக்கு பூர்த்தி ஆகின்றது..சிலருக்கு ஆவதில்லை.பலர் வாழும் வாழ்க்கையை கவலைகள் கொண்டு நிரப்பி, நரகத்தை அமைத்து கொண்டு துன்பபடுகின்றனர்.

மனிதர்களை எதிர்ப்படும் போது ஒரு சிறு புன்னகை பூக்கலாமே..ஒரு நன்றி சொல்லலாமே..பேருந்து நடத்துனர்,மளிகை கடை அண்ணாச்சி,ஷாப்பிங் மால் பில் கவுன்டரில் அமர்ந்திருப்பவர்,ஆட்டோ ஓட்டுனர்,பெட்ரோல் போடுபவர்,சக்கரத்தில் காற்று நிரப்புபவர் என இப்படி பல பேரை சந்திக்கிறோம்..அனைவரிடமும் நமது நன்றியையும் மனிதத்தையும் வெளிப்படுத்துவோம். 

குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் என் நண்பர்களே, சாலையில் யாரேனும் செய்த தவறால் உங்கள் நேரம் பாதிக்க பட்டால்,தயவு செய்து வார்த்தையால் ஒரு மனிதனை புண்ணாக்காதீர்கள்.அவன் தன் வாழ்வில் கடந்து வருகின்ற இன்னல்கள் என்னவென்று உங்களுக்கு தெரியாது..
உங்கள் மேலதிகாரிகள் செய்கின்ற தவறுகளை நீங்கள் இதே போல் தட்டி கேட்பீர்களா?? கண்டிப்பாக மாட்டீர்கள்.. 

நாம் வெளிநாட்டில் வாழும் போது இந்தியனை கண்டால்(அவன் எந்த மாநிலத்தை சேர்ந்தவனக இருந்தாலும்) சந்தோஷம். வெளி மாநிலத்தில் வாழும் போது நம் மாநிலவனை கண்டால் சந்தோஷம். நம் ஊரில் வாழும் போது,நம் ஜாதியவனை கண்டால் சந்தோஷம்.இப்படி பிளவு பட்டுதான் கிடக்கிறோம்.என் நாடு,என் மக்கள்,என் மாநிலம்,என் மொழி,என் ஊர்,என் தெரு,என் சாதி என வாழ்வில் சிறு வட்டம் போட்டுகொண்டு வாழ வேண்டாம்..

அன்பு என்பது நம் உறவினர்கள் ,நண்பர்களுக்கு மட்டும் அல்ல..அது இந்த உலகில் வாழும் அனைவருக்கும் நாம் கொடுக்க வேண்டியது..

நாட்டு  பற்று வேண்டும் தான்.அதை விட பெரிது  மனிதநேயம் என்று நினைக்கிறேன்!!

Tuesday, April 26, 2011

செல்போன்

 கல்லூரி வாழ்க்கை மிக வேகமாக ஓடிவிடும்.எப்போ டா முடியும் என்று சிலரும்,ஐயோ முடிய போகுதே என்று சிலரும் கவலை படுவார்கள்.
என்னோட பள்ளியில் படிக்கும் வரை,எல்லாரும் ரொம்ப வெகுளியாக இருந்தாங்க.ஆனா காலேஜ்ல எல்லாரும் ரொம்ப சுயநலவாதியா இருக்காங்க..கல்லூரியில் படிக்கும் சிலர் கூறுவது உண்டு ..

நம்மை பொறுத்த வரை எப்பொழுதுமே,மற்றவைகளை தான் "மாறி விட்டார்கள்" , "மாறி விட்டார்கள்"  என்று குறை கூறுவோம்.ஒரு நாளாவது நாம் மாறி விட்டோமா?நமது குணம் உண்மையிலேயே நல்ல குணம் தானா?மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நம்மிடம் ஏதேனும் உண்டா,என்று யோசித்து இருக்கோமா?

சரி,விஷயத்துக்கு வா,என்கிறீர்களா?வருவோம்

நமது வாழ்வில்,அனைவருமே மாறிய/அனைவரையுமே மாற்றிய ஒரு சாதனம் செல்போன்.
முன்பெல்லாம் செல்போன் வைத்திருப்பவர்கள் அரிது.இப்பொழுதெல்லாம் இது இல்லாதவர்களை நாம் காண்பது அரிது.கையில் செல்போன் இல்லாமல் நம்மால் கை வீசி  நடக்க கூட முடியவில்லை.ஏதோ குறைவது போன்று ஒரு நினைப்பு,தவிப்பு. செல்போன் பயன்பாட்டுக்கு வரும் சிறிது வருடங்களுக்கு முன் நாம் எப்படி இருந்தோம்?அதை நம்மால் இப்போது நினைத்து கூட பார்க்க இயலவில்லை!! உண்மையிலேயே செல் போன் வைத்துகொள்ளாதவர்கள்    மிக மிக அதிருஷ்டசாலிகள்.

செல்போன் வாங்குவதற்கு என்ன ஒரு ஆர்வம் காட்டுகின்றோம்!!மார்கெட்டில் புது புது டிசைன்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.புதிதாக ஒன்றை வாங்கி இருப்போம்.சிறிது நாளிலேயே அதை விட அழகிய/வசதிகள் நிறைந்த செல்போன் ரிலீஸ் செய்யபட்டிருக்கும்.உடனே நமக்கும்,நாம் கொஞ்சம் பொறுத்து அதை வாங்கி இருக்கலாமோ எனும் கவலை எழும்.புது செல்போன் வாங்கிய சந்தோஷம் கூட நமக்கு தங்காது.வாங்கும் வரை மட்டுமே ஒரு பொருளின்/ செல்போன் மீது ஆர்வம் இருக்கும் ,வாங்கிய பின் அந்த ஆர்வம் குறைந்து காணாமல் பொய் விடும்.

அலுவலகத்தில் சேர்ந்த பிறகு,நாம் எங்கு செல்கிறோம்,எங்கு போகிறோம்,என்ன பொருளை வாங்குகிறோம் என்று நமக்கே தெரியவில்லை.வாரம் ஒரு செல்போன் வாங்குபவர்கள்  உண்டு. பேசிக் மாடல் எனப்படும் பழைய செல்போன்களை மட்டுமே உபயோகிப்பவர்களும் உண்டு.

சிலருக்கு செல்போனில் அழைப்பு வந்ததும்,தனியாக ஓடி சென்று ஒரு தனி இடத்திலே பேசுவர்.சிலரோ இருக்கும் இடத்திலேயே மிக சத்தமாக ஊருக்கே கேட்கும்படி கத்துவார்கள்.


யாருக்காவது காத்திருக்கும் சமயத்தில் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பவர்கள்  கூட இப்பொழுதெல்லாம் தங்கள் கைபேசியை எடுத்து நோண்டுகின்றனர்.௫ நிமிடங்களுக்கு ஒரு முறை,சும்மாவாவது செல்போன்ஐ எடுத்து பார்ப்பர் சிலர்.
சதா சர்வகாலமும்  மெசேஜ்  அனுப்பிக்கொண்டே  இருப்பார் சிலர்.
  
அழைப்பு வந்தாலோ அல்லது அழைக்க வேண்டி இருந்தாலோ மட்டுமே செல்போன் நமக்கு தேவை.தேவைகேற்ப அதனை உபயோக படுத்தினால் மட்டுமே போதும்.தூங்கும் போது  தலையணையின் கீழ் வைத்து கொண்டு உறங்குவோம்.இது உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்.காலை நம்மை எழுப்பும் அலாரம் கூட செல்போன் தான்.முடிந்த வரை செல்போன் ஐ தூரமாக வைத்து படுக்கவும்.

கல்லூரியில் படிக்கும் போது,ஒரு முறை என் தந்தையிடம் கெஞ்சி கேட்டு செல்போன் வாங்கிக் கொண்டேன்.சில நாட்களில் அது பழையதாகி விட்டது.உடனே என் தந்தையிடம் கெஞ்சினேன்."ப்ளீஸ் ப்பா,வேற போன் வாங்கி குடுப்பா"என்றேன்.இப்போ இருக்க போன் என்ன ஆச்சு? என்றார்.அது பழாயிடுச்சு,என்றேன். ஹலோ சொன்னால் கேட்கிறதா,என்றார்.ஹ்ம்ம் என்றேன்.மற்றவர் பேசுவது கேட்கிறதா,என்றார்..ஒ அதெல்லாம் கேக்குது.ஆனா போன் பழைய மாடல்ப்பா ,என்றேன்.செல்போன் என்ன வேலை செய்யணுமோ அதையெல்லாம் அது ஒழுங்கா  செய்யுது,அப்புறம் எதுக்காக மாத்தணும்?என்றார்.ச்சே..என்ன இப்படி சொல்லிட்டார் என்று எனக்கு ஒரே சோகம்.

இப்பொழுது தான் எனக்கு புரிகிறது.அவர் சொன்னது 100 %  உண்மை.அழகு பொருளாக தான் நான் எனது செல்போன்ஐ பார்க்கிறேன்.
அடுத்தவர் பார்த்து மெச்ச வேண்டும் என்று என் மனம் அசை படுகின்றது.அப்படி என்றால் அதற்க்கு முடிவே இல்லை என்று புரிந்து கொண்டேன்.

நாம் செலவு செய்த பின்னரே,நம்மை நாமே நொந்து கொள்வோம்."ச்சே தேவை இல்லாம இதை வாங்கி வெச்சுட்டேன்"அதற்காக செல்போன் புதிதாக வாங்கவே கூடாது என்று நான் சொல்லவில்லை.எந்த ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு,"இது நமக்கு உண்மையிலேயே இப்பொழுது தேவை தானா?"என்று ஒரு முறை உங்களை நீங்களே கேட்டு பாருங்கள்,நீங்கள் செய்யும் வீண்  செலவுகள் தானாகவே குறையும்.

செல்போன் என்ற கருவி நம்முள் ஒன்றாகி விட்டது.ஆனால் அந்த கருவி நம்மை ஆட்டுவிக்க கூடாது.
அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு எனும் பழமொழிக்கேற்ப,அளவோடு உபயோகித்து,உடல் நலமுடன் வாழ்வோம்.

Monday, January 24, 2011

ஈசன்

சமீபத்தில் நான் பார்த்த இந்த படம்,என் மனதை மிகவும் பாதித்தது.பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி பார்க்க தொடங்கினேன்.இந்த படத்தில் சராசரி வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை மிக அழகாகவும்,அழுத்தமாகவும் காட்டி இருக்கின்றனர்.

மது அருந்துதல் என்பது பொழுது போக்கிற்காக செய்யும் ஒரு பழக்கம் என்று நினைப்பவர்கள் இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.


மதுவினால் ஒருவன் நிலை இழந்து, காரில் சென்று கொண்டே  ஒரு பெண்ணை துரத்துகிறான்.அவள் விபத்துக்குள்ளாகி சாகிறாள்.போலீஸ் அவனை பிடிக்கிறது.போலீஸ் இடமிருந்து வெளியே வந்த பிறகு,அதை கொண்டாட மறுபடி குடிக்க செல்கிறான். அவனது பெற்றோர்களும் அவனை கண்டிக்காமல் அவனது செயல்களை வெகு சாதரணமாக எடுத்து கொள்கின்றனர்.அவன் தன்னுடைய பெண் தோழிகளையும் மதுவிற்கு அடிமை படுத்துகிறான்.பணம்,மது  இரண்டும் சேர்ந்த பிறகு வாழ்வில் எதுவும் தப்பு இல்லை,எந்த செயலையும் செய்யலாம் என்ற தைரியம் வந்து விடுகின்றது அவனுக்கு.அவனால் ஒரு சாதாரண குடும்பம் எப்படி பாதிக்க படுகிறது என்பதே படத்தின்  கதை.

தவறு என்று தெரியாமல்,நண்பர்கள் கூறியதற்காக மது அருந்தும் நாயகி.தனது கஷ்டத்தை கூறி அழ கூட யாருமின்றி,தனிமையில் யோசித்து  தற்கொலை செய்து கொள்ளும் தந்தை.குடும்பம் இன்றி தன்னம்பிக்கையோடு படிக்கும் தம்பி..என்று பாத்திரங்கள் மிக அருமை.

இப்படத்தின் மூலம் நான் உணர்ந்த சில விஷயங்கள் :
1 ) மது ஒருவனை எந்த ஒரு தீய செயலையும்,யோசிக்காமல் செய்ய வைக்கும்.
2 ) பெற்றோரின் நடத்தையை பொறுத்தே பிள்ளைகளின் குணம்.இது வளர்ந்த பெற்றோர்க்கும்,வளர்ந்த பிள்ளைகளுக்கும் பொருந்தும்.
3 )  கல்லூரி வாழ்க்கையில்  ஒருவனை 80 % தீய பழக்கங்களையே கற்று கொள்கிறான்.

தற்காலத்தில் பல இளைஞர்கள் மது,புகை பிடித்தல் இவை இரண்டும் கேட்ட பழக்கம் என்று சொன்னாலே கோவபடுகின்றனர்.அளவுக்கு மீறி குடித்தால் தான் அழிவு என்று விளக்கம் வேறு.தனக்கு வரும் மனைவி,தனக்கு விட்டு குடுத்து வாழ்கிராளோ இல்லையோ, ஊற்றி குடுத்து வாழ வேண்டும் என்று பலர் ஆசை படுகின்றனர்.(உபயம் : சில்லென்று ஒரு காதல்).. இவ்விரண்டு பழக்கங்கள் இல்லைதவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்.உடலுக்கும் கேடு விளைவிக்கும் மதுவையும்,புகையையும் என் நாட்டு மக்கள் என்று தான் கைவிடுவரோ!!

மது பற்றிய என்னுடைய கருத்து மது அருந்தும் பெண்களுக்கும் பொருந்தும்.


அந்நியன் சொல்வது போல,நாம் செய்வது தப்பு என்று தெரியாத அளவிற்கு அந்த தப்பு நம்முள் ஊறி போய் இருக்கிறது.

ஒரு சின்ன கதை:
ஒருவன் எந்த தவறும் செய்யாமல் சொர்க்கத்திற்கு சென்றானாம்.சித்ரகுப்தன் ,"நீ எதாவது ஒரு தவற்றையாவது செய்"என்று மூன்று அறைகளை காண்பித்தான்.ஒன்றில் மது.நீ  குடிப்பதற்கு.இரண்டாவதில் ஒரு பெண்.அவளை நீ அடையலாம் .மூன்றாவதில் அவனுடைய எதிரி.கத்தியை எடுத்து நீ அவனை கொல்லலாம்,என்று சித்ரகுப்தன் சொன்னார்.உடனே அவன்,மற்றவர்களை துன்புறுத்த நான் விரும்பவில்லை.மதுவை மட்டுமே குடித்து கொள்கிறேன் என்றானாம்.
முதல் அறையில் மதுவை குடித்தான்.பிறகு குடி போதையில் இரண்டாம் அறைக்கு சென்று அவன் எதிரியை கொன்று விட்டு,மூன்றாம் அறையில் உள்ள பெண்ணையும் அடைந்தான்.ஆக மது ஒன்றே போதும்.வேறு எந்த தவற்றையும் தனியே செய்ய வேண்டாம்.அதுவே அனைத்துக்கும் வழி வகுக்கும்..

Thursday, November 11, 2010

கல்லூரி - 6

அந்த அறையில் இருந்த அனைவரும்  சட்டென்று  அறை கதவை நோக்கினோம்.ஹுமன் ரீசோரஸ் எனப்படும் மனித வள வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர் அவர். அவர் பெயர் வேல்முருகன்.மாணவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர் மற்றும் நான் ஒரு ஆசிரியர் என்று இரு வேறு கருத்துக்களோடு மாணவர்களிடம் பழகுபவர்.அவர் வகுப்புகளை சிலர் வெறுப்பர்.சிலர் விரும்புவர்.நான் விருப்பும் கூட்டத்தை சேர்ந்தவள்.ஐயோ,இவர் முன்னிலையிலும் மானம் போக வேண்டுமா கடவுளே!!என்று நொந்து கொண்டேன்.
 
உள்ளே நுழைந்த அவர் என்னை கண்டதும்,"ஏனம்மா மங்கை,இங்கே ஏன் நிற்கிறாய்?"என்று கேட்டார்.இது ராக் செய்தவர்களை விசாரிக்கும் கூடம் அல்லவா,என்றார்.நான் பதில் சொல்ல  எத்தனித்ததும் , ஓஹோ,உன்னை யாரேனும் ராக் செய்து விட்டார்களா?அதை கம்ப்ளைன்ட் பண்ண வந்திருக்கயா என்றார்.என் மானம் காற்றில் பட்டுஒளி  ஒளி வீசி என் கண் முன்னாடி பறந்தது.

தலை குனிந்து அமைதி காத்தேன்.அங்கிருந்த ஆசிரியர் முதல் வருஷமே சக தோழியரை ராக் செய்த புகழுக்கு உரிய பொண்ணு சார்,இவங்க ரெண்டு பேரும்,என்றார்.என்னோட இவ்வளவு வருஷ அனுபவத்துல,சக வருட பெண்களை ராக் செய்த நிகழ்ச்சி நடந்ததே இல்ல.கண்டிப்பா இந்த பொண்ணுங்கள டிஸ்மிஸ் பண்ணனும்.அப்போ தான் மத்தவங்க பயபடுவாங்க என்றார்.எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது,ஏன் என்றால் இந்த வரியை சொல்லி விட்டு அந்த கிழட்டு ஆசிரியர் தன்னோடைய மூக்கு கண்ணாடியை கண்ணில் இருந்து தலையில் மாட்டி கொண்டார்.அதை பார்பதற்கு அந்த கால சினிமா நடிகையர் போல இருந்தது.

பாருங்க கல்லு மாதிரி நிக்கிது இந்த பொண்ணு என்று இன்னொர்வர் கூற,
ச்சே ச்சே,அப்டி எல்லாம் சொல்லாதிங்க சார்.இந்த பொண்ணுங்கள பாத்தா அப்டி தெரியல சார், என்றார் வேல்முருகன்.இவங்க வகுப்புகளுக்கு நான் போயிருக்கேன்.எனக்கு இவங்கள பத்தி நல்லாவே தெரியும்.நல்ல பொண்ணுக,மன்னிச்சு விட்ரலாம்.என்றார்.அந்த நொடியே எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சிக்கு அர்த்தம் புரிந்தது.

இனிமேல் இந்த மாதிரி எல்லாம் பண்ணி,உங்கள நீங்களே பிரச்சனை ல சிக்க வெச்சுக்க கூடாது.புரியுதா என்றார்.வேக வேகமாக தலையை எல்லா திசைகளிலும் ஆட்டினேன்.சரி ரெண்டு பேரும் போங்க என்றார்.அந்த இரு ஆசிரியர்களும் என்னை முறைப்பது போன்று ஒரு எண்ணம்.
அதை கண்டு கொள்ளாமல் குடு குடு என்று அந்த அறையை விட்டு வெளியேறினேன்.என்னுடன் இருந்தவள்,ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தாள்.நான் வெளியே வந்து ஒரு கணம் சுய நினைவுக்கு வந்தேன்.


கடவுளை நினைத்து மனமார நன்றி சொன்னேன்.

Thursday, October 28, 2010

கல்லூரி - 5

கஷ்டமோ நஷ்டமோ நடந்து விட்டால் கூட மனம் தாங்கி கொள்ளும்..ஆனால் பயத்தோடு காத்திருக்கும் தருணங்கள் கொடுமையிலும் கொடுமை. இதை நான் பரீட்சைக்கு செல்லும் போதும்,ரிசல்ட் வரும் போதும் உணர்ந்து இருக்கிறேன்..நடப்பது எதுவாகினும் அது சீக்கிரமே நடக்க வேண்டும்...என்ன நடக்குமோ எதோ என்று பயந்து பயந்து இருக்கும் நொடிகளே வாழ்வில் நரகம்.
என் இதயம் துடிப்பது எனக்கு நன்றாக கேட்டது..இந்த வகுப்பில் மங்கை என்பது யார்..என்று அவர் கேட்டார்..இந்த கேள்விக்காக தானே மூன்று வகுப்புகள் காத்திருந்தேன்..சட்டென்று எழுந்து நின்றேன்..பெரும்பாலான வகுப்பில் இது நடக்கும்..வகுப்பில் யாரேனும் ஒருவர் கேள்வி கேட்டாலோ,அல்லது ஆசிரியரால் கேள்வி கேட்கப்பட்டு விட்டாலோ..எழுந்து நின்றாலோ...மொத்த வகுப்பும்  கழுத்தை திருப்பி கொண்டு பார்க்கும்..முதல் பெஞ்சில் இருப்பவர் கூட தலை சுளுக்கும் அளவுக்கு திரும்பி பார்ப்பார்..ஏனென்றால் வேடிக்கை பார்ப்பது அனைவருக்கும் மிக பிடித்த ஒன்று..

"உன்னை ஆபீஸ் ரூம் கு வர சொல்லி இருக்காங்க"என்றார்.நான் செல்வதற்காக அனுமதி வாங்க ஆசிரியரை நோக்கினேன்.செல் என்று செய்கை செய்தார்.அட்டெண்டென்ட் உடன் வெளியேறினேன்.ஆபீஸ் ரூம் செல்லும் வழியில் அவருடன் பேச்சு குடுக்கலானேன்."அண்ணே,எதுக்கு அண்ணே என்னை வர சொல்லிருக்காங்க" என்று கேட்டேன்.அதெல்லாம் எனக்கு தெரியாது ம்மா என்றார்.பிரின்சிபால் ஆ கூப்டாரு?என்று கேட்டேன்."இல்லம்மா ,நம்ப இங்கிலீஷ் டிபார்ட்மென்ட் தலைமை ஆசிரியர் அப்புறம், பயோ டெக் டிபார்ட்மென்ட் தலைமை ஆசிரியர் இருவரும் தான்..எல்லா விஷயமுமே முதல்ல இவங்க தான் டீல் பண்ணுவாங்க,அப்புறம் இவங்க முடிவு தான் பிரின்சிபால் முடிவு"என்றார்.
ஆக மொத்தம் எனக்கு முடிவு என்றே முடிவு செய்து கொண்டேன்.


ஆபீஸ் ரூம் இல்,ஓர் அறையை காண்பித்து என்னை அங்கே போக சொன்னார்.உள்ளே சென்றால்,இருவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசி கொண்டு இருந்தனர்.என்னை பார்த்ததும் என்ன வேண்டும் என்று கேட்டனர்.இதற்கு என்ன பதில் சொல்ல? என்று நான் திரு திரு வென விழித்தேன்.ஆபீஸ் ரூம் வரும்படி கூறினார்கள் என்றேன்.இதை கேட்டதும் இருவரும் திடுக்கிட்டனர்.நீ தான் அந்த மங்கை யா?என்றார்கள்.'ஆம்' என்றேன்.பார்க்க ஒன்றும் தெரியாத பெண் போல இருக்கிறாய்.அனால் பண்ணும் காரியம் எல்லாம் படு பாதகமானவை.நான் அமைதி காத்தேன்.


என்னால நம்பவே முடியல சார்,பாருங்க இந்த பொண்ணு கூட இப்டியே தான் பண்ணி இருக்கு.அவங்க வருடம் படிக்கற சக துறை பெண்களை ராக் பண்ணி இருக்கு ன்னா,இதுங்க எவ்ளோ பெரிய கேடிங்க,இன்னும் இரண்டாம் வருடம் என்ன வெல்லாம் பன்னுமுங்க.கண்டிப்பா பெரிய தண்டனை குடுக்கணும் சார்,என்றார் ஒருவர்.


தண்டனை என்ற வார்த்தை ஐ அவர் சொன்ன உடனேயே சார் என்று கத்தி,என்னை மன்னிச்சுடுங்க,தெரியாம பண்ணிட்டேன்,ஒரு வாட்டி ட்டும்,ப்ளீஸ் என்று அழுது குரலே தளர்ந்து விட்டது.எனக்கல்ல!! அந்த குரல் என்னுடையதும் அல்ல.யாரந்த குரல் என்று அறையை நோட்டம் விட்டேன்.ராக் செய்ய என்னோடு ஒட்டிகொண்டு வந்தாலே ஒருத்தி,அவளே தான்.அவளும் அங்கேயே நின்று இருந்தாள்.இந்த கூப்பாடு அவளுடயதே!!பயோ டெக் தலைவர் என்னை பார்த்தார்.ஏனம்மா நீ அழ வில்லையா?என்று கேட்டார்.உண்மையில் எனக்கு அழுகையே வர வில்லை.என்னை அழ வைக்க என் தந்தையால் மட்டுமே முடியும்.அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்.காவேரி அணையை திறந்து விட்டது போல அருவி கொட்டும்.மற்றபடி எவர்,எப்படி  திட்டினாலும் கானல் நீரை கூட காண முடியாது.ஆனால் பயம் இருந்தது.கவலை இருந்தது.'நான் மிகவும்  செய்தது  தப்பு தான் சார்,சாரி.மன்னித்து விடுங்கள்'என்றேன்.

என்ன இவ்ளோ சாதாரணமா சொல்ற.நீ பண்ண தப்புக்கு உன்னை ஜெயில் ல கூட போடலாம் தெரியுமா?என்றார்.மனதிற்குள் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.ஒரு நிமிடம் நான் என்னை ஜெயில் கைதியாக நினைத்து பார்த்தேன்.சிரிப்பை வெளிக்காட்டி கொள்ளது அப்படியே நின்றேன்.இன்னொருத்தி ஜெயில் என்றதும் வீரிட்டு அழுதாள்.



நிமிடங்கள் கரைந்தன.தண்டனையை அவர்கள் சொல்ற பாடும் இல்லை.எங்கள் மன்னிப்பை ஏற்ற பாடும் இல்லை.நானும் விடாது,சாரி சொல்லி கொண்டிருந்தேன்.நீ பிச்சைக்காரி என்று நினைத்துக்கொள்.மன்னிப்பு என்ற பிச்சை விழுந்தாள்,மானம் என்ற உயிர் காக்க படும் என்று என் மனம் ஆணை இட்டது.'ஐ அம் ஏ வெரி ஹர்ட் ஹார்ட்டடு   மேன்'என்றார் அந்த வயது முதிர்ந்த ஆசிரியர்.தெய்வமே எதையாவது செய்து  என்னை காப்பாற்று என்று மனதிற்குள் கதறினேன்.



அப்போது புயலாக ஒருவர் உள்ளே நுழைந்தார்.

Monday, October 25, 2010

கல்லூரி - 4

நாட்கள் உருண்டோடின..ரொம்ப சீக்கிரமா போய்டுச்சு இல்ல ன்னு சொல்லியே பல நாட்கள் சென்றன..ஒரு நாள் இரவு மாலா தேவி என்னை அழைத்தாள்..அவள் அறைக்கு சென்றேன்..திடுதிப் என்று "ஹே நீ நல்லா மாட்டிகிட்ட டி.."என்றாள்..என்ன விஷயம் என்று தெரியாமலேயயே எனக்கு குபீர் என்று அடிவயிற்றில் ஏதோ ரசாயான மாற்றம் நிகழ்ந்தது..என்ன டி சொல்ற..என்றேன்..
நீ ராக் பண்ணியே ஒரு பொண்ணு,அவ யார் தெரியுமா?என்றாள்..தெரியாதே!!அவ பேரு கூட கேக்காம வந்துட்டேனே!!என்றேன்..
ஹ்ம்ம் ரொம்ப முக்கியம்..உனக்கு அவ பேர தெரியல..ஆனா அவளுக்கு உன் ஜாதகமே தெரியும்..நீட் ஆ உன் பேரு, டிபார்ட்மென்ட்,செக்சன் எல்லாத்தையும் போட்டு குடுத்துட்டா..நீ அவள ராக் பண்ணி அழ வெச்சுருக்க ன்னு கம்ப்ளைன்ட் பண்ணிட்டா..நாளைக்கு உனக்கு (என்குயரி) விசாரணை இருக்கும் டி..எதுக்கும் ஜாக்ரதை யா இரு..என்று சொல்லி முடித்தாள்..

என்ன டி சொல்ற..எனக்கு ஒண்ணுமே புரியல..
விளையாடாதடி..ப்ளீஸ்..சும்மா தானே சொல்ற..உண்மைய சொல்லு டி சாக்லேட் வாங்கி தரேன்..இப்டி லாம் பயமுருத்தாதே டி..என் மனம் அவள் பொய் சொல்லி இருக்க வேண்டும் என்று 100௦௦%  நம்பியது..
அவள் தொடர்ந்தாள்..இல்ல டி..நெசமா தான் சொல்றேன்..இன்னிக்கு என் கிளாஸ் ல கொஞ்ச பெண்கள கூப்பிட்டு,சீனியர் அக்கா யார் எல்லாம் ராக் பண்றாங்க ன்னு கேட்டாங்க..அப்போ ஒரு பொண்ணு எங்க செட் பொண்ணுங்க கூட ராக் பண்றாங்க ன்னு போட்டு குடுத்துட்டா டி.. முதல் பேரே உன்னோடது தான்..அடுத்தது உன்கூட ஒருத்தி ஒட்டிக்கிட்டு  வந்தாளே அவ..அப்புறம் இன்னும் கொஞ்ச பேரு..ஆனா இந்த விளையாட்ட, ஆரம்பிச்சு வெச்சாளே ரமா  ..அவ பேரு இல்ல டி..எப்டியோ எஸ்கேப் ஆயிட்டா..என்றாள்..

அவ்வளவு தான்..எனக்கு தலையை சுற்றிகொண்டு வந்தது..அய்யய்யோ அப்பா அம்மா படிப்புல முதல் மாணவி யா வரணும் ன்னு சொல்லி அனுப்பினாங்களே..இப்போ இதுல போயி முதல் மாணவி யா வந்திருக்கேனே...போச்சு...வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்..அப்பா வுக்கு தெரிஞ்சா..என்னை தொலைச்சு கட்டிடுவாரு...டிஸ்மிஸ் ஆ இல்ல சஸ்பெண்ஷன் ஆ..என்ன நடக்க போகுதோ..வாய மூடிகிட்டு இருந்திருக்கணும்..ஏன் அப்டி பண்ணேன் என்று நூறு முறை யோசித்தேன்..

என் அறைக்கு சென்றேன்..கடவுள் படம் ஒன்று இருந்தது..அதன் முன்னால் நின்றேன்..கடவுளே தெரியாம தப்பு பண்ணிட்டேன்..என்னை மன்னிச்சுடு..என்றேன்..சுரீர் என்று என் மண்டை யில் யாரோ அடித்தது போன்று இருந்தது..ஏன் மனசாட்சி தான்.."ஏன் டி பண்றதும் பண்ணிட்டு ரொம்ப நல்ல பொண்ண ஆண்டவன் கிட்ட மன்னிப்பு கேக்கறியா??ஏன் தண்டனை லேந்து எஸ்கேப் ஆகுறதுத்துக்கு தானே??சரியான சுயநலவாதி டி நீ"என்றது.."உலகத்துல எல்லாரும் சுயநலவாதி தான்" என்றேன்..மறுபடி மண்டையில் அடித்தது..அப்போ நீ திருந்த மாட்ட ன்னு சொல்ற??உன் திமிருக்கு நீ இன்னும் அனுபவிப்ப டி"..என்றது..

உலகில் அனைவரும் சுயநலவாதிகள் தான்..ஆனால் அந்த சுயநலம் எந்த அளவு நமக்குள் ஆட்சி பெற்றிருகிறது என்பதை பொறுத்து தான் நம்முடைய குணம் மற்றவரிடம் இருந்து வேறு படுகிறது..

கடவுள் படத்தை பார்த்தேன்..விடு விடு என்று வெளியே சென்று..நான் ராக் செய்த அந்த பெண்ணின் அறைக்கு சென்றேன்..அந்த பெண்ணை பார்த்து..என்னை மன்னித்து விடு..நான் செய்தது உன்னை மிகவும் புண்படுத்தி விட்டது என்று உணர்ந்தேன்..நான் விளையாட்டிற்கு அப்டி செய்து விட்டேன்..என்றேன்..உடனே அந்த பெண்..மிகவும் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு,என்ன விளையாட்டு வேண்டி இருக்கு..அப்புறம் சாரி வேற கேக்கற..கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன் ன்னு தெரிஞ்சு இப்போ கேக்கற..இல்லன்னா கேட்ருபியா??என்றாள்..

என்னை சவுக்கால் அடித்தது போல மனம் வலித்தது..பாரதி ராஜா படத்தில் இப்படி பட்ட காட்சிகள் வரும்..ஒருவர் வசனம் பேசியதும்,மற்றவர் தன்னுடைய கன்னத்தில் அரை வாங்கியவர் போல உணர்ந்து  கொள்வார்..அப்போதெல்லாம் எனக்கு புரியாது..இப்போது நன்றாக புரிகிறது..


அப்பா அம்மா வின் நம்பிக்கை க்கு துரோகம் செய்து விட்டேன் என்ற குற்ற உணர்வு..அந்த பெண்ணை வருத்தி விட்டேன் என்ற வருத்தம்..நாளை என்ன நடக்குமோ என்ற பயம்..அனைவருக்கும் தெரிந்து விடுமே,மறுபடியும் எப்படி ஆசிரியர், அனைவரையும் சந்திக்க போகிறேன் என்ற தயக்கம்....இவை அனைத்தும் ஒன்று சேர அழுத்தியது...அழுகை மட்டும் வரவில்லை..


மறுநாள் காலை..கல்லூரி க்கு கிளம்பினேன்..எழுந்தது முதல் ஒரே கலக்கம்..காலை உணவு அருந்த வில்லை..அப்படியே வகுப்புக்கு சென்று அமர்ந்தேன்..எப்படியும் ப்ரின்சிபாலிடம் இருந்து அழைப்பு வரும்..உடனே எழுந்து ஓடி விடலாம்..என்று வாகுவாக முதல் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்..முதல் மூன்று வகுப்புகள் நடந்து முடிந்தன..எந்த அழைப்பையும்  காணோம்..என்னால் உட்காரவே முடிய வில்லை..நான்காவது வகுப்பு ஆசிரியர் நுழைந்தார்..கூடவே ஒரு அட்டென்ட்டன்ட் எனப்படும் ஒருவர் கையில் ஒரு தாள் ஐ எடுத்து வந்தார்..தெரிந்து விட்டது..அது எனக்கான அழைப்பே தான்..

Friday, October 22, 2010

கல்லூரி - 3

கதவை திறந்து ஒரு பெண் திரு திரு வென்று முழித்தாள்..என் மனசுக்குள்ள,ஓஹோ இவ புது பொண்ணு காலேஜ் க்கு..நாம்ப முழிச்சா மாதிரியே முழிக்கறா..கொஞ்சம் விளையாடலாம் ன்னு ஒரு தைரியத்துக்கு வந்தேன்..

மாலா தேவி என்று ஒரு பெண் எங்கள் நட்பு வட்டத்தில் இருந்தாள்..அவள் சொந்த ஊரு மதுரை..அவள் மிகுந்த தைரியசாலி என்று அனைவரும் என்னிடம் சொன்னனர்..தைரியசாலி என்ற பட்டம் யாருக்கு பிடிக்காது?உண்மையில் பிறப்பில் யாரும் தைரியசாலிகள் அல்ல..வளர்ப்பிலும்,சூழ்நிலைகளின் தயவாலும்,சுற்றி உள்ளோரின் நடத்தையினாலும் தைரியசாலிகளாக மாற்ற படுகின்றனர் என்பது என் கருத்து..

என் மனசுல அந்த பொண்ண ராக் பண்ணலாமா வேணாமா ன்னு யோசிச்சுட்டு இருக்கும் போதே,என் கூட வேடிக்கை பாக்றேன் ன்னு தொத்திகிட்டு வந்த பொண்ணு,"ஹே உன் பேர் என்ன?என்ன சீனியர் ன்னு மரியாதை இல்லாம பாக்கற?"அப்டின்னு அந்த அறை பெண்ணை விரட்டினாள்."சாரி அக்கா" என்று அந்த அறை பெண் சொன்னாள்..தன் சக வயது பெண் ஒருத்தி எங்களை மரியாதையை கலந்த பயத்தோடு அக்கா என்று அழைத்ததும் எங்களுக்கு ஒரு வித சந்தோஷம் வந்தது..அறை உள்ளே சென்றோம்..எங்கள் சீனியர் அக்கா எங்களை என்ன வெல்லாம் கேட்டு ராக் செய்தனரோ அதை அதன்னையும் காபி பேஸ்ட் செய்து அந்த அறை பெண்ணை மடக்கினோம்..

எனக்கோ,உள்ளூர பயம்..அதையும்  மீறி...'என்ன செயாறீங்க' ன்னு பாக்க வந்த பொண்ணு இப்டி ராக் பண்றாளே..நம்ப என்ன வேஸ்ட் மாதிரி இருக்கோம் ன்னு ஒரு ஈகோ எட்டி பார்த்தது..அதனால் போட்டி போட்டுக்கொண்டு ராக் செய்தோம்..

ராக் என்றால் சும்மா பேச்சு குடுத்து சக பெண்களை வெறுப்பேற்றுவது..உதாரணம் --  கேள்வி- தமிழ்நாட்டோட கேபிடல் என்ன?வரும்  பதில் சென்னை..அடுத்த  கேள்வி யாக சென்னை ஓட கேபிடல் என்ன?? இதற்க்கு பதில் யாரால் கூற முடியும்..அந்த பெண் தெரியலை என்று சொன்ன வுடன்..ஒரு பேப்பரில் CHENNAI  என்று எழுதி இதுவே கேபிடல் என்று கலாய்போம்..இவ்வாறு பல கேள்விகள்.. மற்றபடி பெண்கள் விடுதியில் கொடுமை யான ராகிங் எதுவும் கிடையாது..

கடைசியாக கிளம்பும் போது நாங்களும் உன்னோட செட் பொண்ணுங்க தான் ன்னு சொல்லிடலாம் ன்னு என்கூட வந்தவளிடம் கூறினேன்..போ டி,அதை சொன்னா சப்பையாயிடும் ,அவங்களே தெரிஞ்சுகட்டும்..அப்டின்னு சொல்லி என் வாயை அடக்கினாள்.

கிட்ட தட்ட ரெண்டு மணி நேரம் அந்த அறை பெண்கள் மூவரை ராக் செய்தோம்..அதில் ஒரு பெண் எனது துறை யை சேர்ந்தவள்..
எங்களை கண்டு பிடித்து விட்டாள்..எங்கள் குறும்பை நினைத்து சிரித்து  கொண்டே இருந்தாள்..வெளியில் காட்டி கொள்ளாது..அவளும் எங்கள் நாடகத்திற்கு உதவினாள்..(பிற்காலத்தில் என் வகுப்பில் அவளே என் மிக நெருங்கிய தோழி ஆனது பெரிய கதை)

சிறிது நேரம் கழித்து ராக் படலத்தை முடித்து கொண்டு, இரவு உணவு அருந்த மெஸ் க்கு சென்றோம்..அங்கு என் தோழியர் அனைவரும்,
ப்ரீத்தி உட்பட அனைவரும் என்னை பார்த்து வியந்தனர்..ஹே எப்டி டி உனக்கு இவ்ளோ தைரியம்..ஆனாலும் உனக்கு தைரியம் டி..செம தில்லு டி உனக்கு என்று என்னை மிகவும் உயர பறக்க வைத்தனர்..

அந்த மாலா தேவி எனப்படும் பெண்ணே,என் புகழை பரப்பி கொண்டு இருந்தாள்..அன்று என்னையும் அறியாத ஒரு சந்தோஷம்..என்னிடம் பேசாத பெண்கள் கூட என்னை தேடி வந்து பேசினர்..என்ன நடந்தது என்று கேட்டனர்..நானும் சந்தோஷமாக விவரித்தேன்..


உண்மையில் நான் தைரியசாலி கிடையாது..வார்த்தைகளின் சக்தி யை அன்று புரிந்து கொண்டேன்..நான் உண்மையிலேயே தைரியம் மிகுந்தவள் என்ற எண்ணம் என் மனதில் ஆழ பதிந்தது..சம  வயது பெண்களை ராக் செய்ய அனைவரும் பயப்பட்டனர்..எனக்கு தான் எவ்ளோ தைரியம் என்று நினைத்தேன்..தான் என்ற அகம்பாவம் என்னுள்ளே புகுந்தது..
அகம்பாவம் வந்தால் அடுத்தது என்ன? அழிவு தானே??